Friday, December 4, 2009

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்-திருச்சி



மூலவர் : ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : நித்யகல்யாணி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாலத்துறை
ஊர் : திருப்பாற்றுறை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வெளவினார் பைந்தன் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 59வது தலம்.


திருவிழா:

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.

தல சிறப்பு:

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. வீணை தெட்சிணாமூர்த்தி: கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தெட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்.

திறக்கும் நேரம்:


காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை- 620 005. பனையபுரம், திருச்சி மாவட்டம்.

போன்:

+91- 431 - 246 0455.

பொது தகவல்:


சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அர்த்தமண்டபத்தில் நான்கு தூண் களுடன் ராஜசபை இருக்கிறது.

இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் சுவாமியை "மூலநாதேஸ்வரர்' என்றும், தலத்தை "கறார் கொன்றை' என்றும் பாடியுள்ளார். இங்கு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அருகிலுள்ள தலங்கள்: பஞ்சபூத தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், 108 திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கம் ஆகியவை இக்கோயில் அருகில் உள்ளன.



பிரார்த்தனை

புத்திரப்பேறு கிடைக்கவும், குழந்தைகள் நல்வாழ்க்கை வாழவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுதல்.

தலபெருமை:


அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை.

சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. தென்திசை எமதர்மராஜாவின் திசை. இவரது உக்கிரத்தைக் குறைக்க தெற்கு நோக்கிய அம்மன்களை வழி படுவதால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில், அம்பாள் நித்யகல்யாணி தெற்கு திசை நோக்கி அருளுகிறாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இப்பூஜையின் போது அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பவுர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சன்னதியில் நடக்கிறது.

புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர். மேலும், அனுக்ஞை விநாயகரும் தெற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருளுவது சிறப்பு. கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவரின் இடத்தில் சங்கரநாராயணர் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர். கோபுரம்3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.



தல வரலாறு:


இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது.

மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை.

சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.

பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்' என்றும், தலம் "பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.



சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது.

No comments:

Post a Comment