Monday, December 14, 2009

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்

"உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!" என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்... இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.

‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.

‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.

உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்...

‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.

விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு... வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்... உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.

கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.

ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.

பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.

இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது... உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.

அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்.... சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.

அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.

இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.

நீரிழிவு

நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும்

பல் வலி

"பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது.

பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.

படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.

இரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.

அவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.

சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.

இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.

பல் சொத்தை ஏன் விழுகிறது?

நம் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்வதாலும் அதைச் சரியாக சுத்தம் செய்யாததாலும் பிளாக் எனப்படும் பல்பாசை உண்டாகிறது. இந்தப் பல்பாசை ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கிறது.

இந்தப் பல்பாசை பசைத்தன்மையுடன் விளங்குவதால் நாம் உண்ணும் உணவில் சிறுபகுதி அதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்ளும் இனிப்பு, ஸ்டார்ச் வகை உணவு துணுக்குகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து வளர்ந்து, லேக்டிக் ஆசிட் எனப்படும் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. இந்த அமிலங்கள் பல்லின் எனாமலில் சொத்தை ஏற்படுத்தி பிறகு அது மெதுவாக உள்ளே பரவுகிறது. ‘டென்டின்’ என்ற உணர்வுப் பகுதியை அது தாக்கியவுடன் கூச்சமும், லேசான வலியும் உண்டாகிறது.

பல் சொத்தை, அருகில் உள்ள பற்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால், பல்லில் நிற மாற்றமோ, கூச்சமோ ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

முதலுதவி

சாப்பாட்டுத் துகள்கள் குழிக்குள் சிக்கிக் கொண்டால் குண்டூசி, குச்சி, நாக்கு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எடுக்கக் கூடாது. பற்களில் குழி (சொத்தை) இருந்தால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, இனிப்பானதையோ சாப்பிடும்போது பல் வலி உயிரை எடுக்கும். இளஞ்சூடான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்.

சிறிய பஞ்சு உருண்டையில் க்ளோவ் ஆயில் விட்டு, அதை குழி உள்ள இடத்தில் கவனமாக வைக்கலாம். வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இவை யாவும் முதலுதவி மட்டுமே.

உடனே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரைப் பார்த்து, குழியை அடைக்க வேண்டும். அல்லது ரூட்கேனல் ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பல்லைப் பிடுங்கி விட்டு புதிய பல்லைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதடு கடித்தல், நகம் கடித்தல், பல் குத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.

நீங்கள் சிரிக்கும்போது மற்றவர்கள் பயப்படாமல் இருக்க இவை உதவக் கூடும்.

பிரபல பல் நோய்கள் நிபுணர் டாக்டர் என்.வி. ஆறுமுகம் தரும் விளக்கம் :

ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது எதனால்?

பாக்டீரியாக்களால் ஈறுகளில் ஏற்படும் ‘இன்ஃபெக்ஜன்’ தான் இதற்குக் காரணம். உணவுத்துÊகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும். உடலில் ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்கள் வயதுக்கு வரும் போதும், கர்ப்பக் காலத்தின்போதும் ஈறுகளில் ரத்தம் வருவதுண்டு.

ஈறுகளில் வலி வரும்போது, ‘க்ளோவ் ஆயில்’ வைக்கலாமா?

தவறில்லை. ஆனால், இது தற்காலிக நிவாரணம்தான். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றக் கூடாது. இதனால் ஈறு வெந்துவிடும் ஆபத்து உண்டு.

பற்களைப் பிடுங்குவதால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுமா?

இது தவறு. பற்களுக்கும் மூளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஏதேனும் நோய்க்கான அறிகுறிதான் பல்வலியா?

சைனஸ் இன்ஃபெக்ஜனாக இருந்தால் மேல் கடவாய்ப் பற்களில் வலி எடுக்கும். மிகவும் அரிதாக, மாரடைப்பின் போது, கீழ்த்தாடையின் இடப்பக்கம் வலி வரும்.

டயாபடீஸ், இதய நோய் இருப்பவர்களுக்கு பற்களில் பாதிப்பு வருமா?

சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். அதனால் கவனம் தேவை. பொதுவாக இதய நோயாளிகளுக்கு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை சிபாரிசு செய்யப்படுவதுண்டு. அதனால் பற்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பல் டாக்டரிடம் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி தெளிவுபடுத்த வேண்டும். இது முக்கியம்.

பற்களில் ‘க்ளிப்’ மாட்டுவது நல்லதா?

நல்லது. பார்க்கவும் அழகாக இருக்கும்.

_ எஸ். அன்வர்
Quelle - Kumutham

Friday, December 4, 2009

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்-திருவாசி






மூலவர் : மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பாலாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : அன்னமாம்பொய்கை, சிலம்பாறு
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாச்சிலாச்சிரமம்
ஊர் : திருவாசி
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் உரிமையால் உரியோன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் அருமையாம் புகழார்க்கு அருள்செய்யும் பாச்சி லாச்சிராமத்து எம் அடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 62வது தலம்.


திருவிழா:

வைகாசியில் 11 நாட்கள் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம்.

தல சிறப்பு:

கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது. பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.

திறக்கும் நேரம்:


காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி-621 216. திருச்சி மாவட்டம்.

போன்:

+91-431 - 6574 972, +91-94436 - 92138.

பொது தகவல்:


பாலாம்பிகை சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும், அன்னமாம்பொய்கை தீர்த்தமும் இருக்கிறது.

இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர்.



பிரார்த்தனை

சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும், தோஷங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வலிப்பு, தீராத வயிற்றுவலி, வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்கள் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வன்னி இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

தலபெருமை:


சர்ப்ப நடராஜர்: முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.

மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, அவளை இக்கோயிலில் கிடத்திவிட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான்.

அச்சமயத்தில் திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தார். அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார். அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோயிலுக்கு வந்தான்.

திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான். மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார். அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார்.

மன்னன் மகளை பிடித்திருந்த நோயை முயலக உருவாக்கி அவனை அழித்து நாகத்தின் மீது ஆடினார். மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை "சர்ப்ப நடராஜர்' என்கின்றனர்.

நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும். அம்பாள் சிறப்பு: அம்பாள் பாலாம்பிகை, இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள்.

இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள். இவளது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.

அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.



தல வரலாறு:


சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக சிவனிடம் பொன் பெற்று அதன் மூலம் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம்.

ஒருசமயம் அவர் திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தார். சிவனையே நண்பராகப் பெற்றிருந்த அவர் இங்கு அவரிடம் பொன் வேண்டி பதிகம் பாடினார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவன் பொன் தராமல் அமைதியாக இருந்தார்.

பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். சிவன் என்பவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து பதிகமும் பாடினார். அதற்கு மேல் சுந்தரரை சோதிக்க எண்ணாத சிவன், அவருக்கு ஒரு பொன் முடிப்பை பரிசாகத் தந்தார். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என சந்தேகம் வரவே அவர் பொன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் இருவரும் சுந்தரரிடம், பொன்னை பார்த்துக் கொண்டிருந்த காரணத்தை கேட்டனர். அவர் "பொன் சுத்தமானதுதானா!,' என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். அவர்களில் ஒருவர் சுந்தரரிடம் இருந்த பொன்னை வாங்கி, அதனை உரைத்துக் காட்டி தரமானதுதான் என்று உறுதி கூறினார். உடனிருந்தவரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் மறைந்து விட்டனர்.

வியந்த சுந்தரர் சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தங்கத்தை உரைத்துக்காட்டியது தான் எனவும், உடன் வந்தது மகாவிஷ்ணு எனவும் உணர்த்தினார். "மாற்றுரைவரதர்' என்ற பெயரும் பெற்றார்.



சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார்.

இருப்பிடம் :
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் செல்கிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
திருச்சி

சாரதா +91-431-246 0216

பிரீஸ்ரெசிடென்சி +91-431-241 4414

ஹோட்டல் விக்னேஷ் +91-431-241 4991-4

ஹோட்டல் அண்ணாமலை +91-431-241 2881-4

ஹோட்டல் மேகா +91-431-241 4092,241 6354

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்-திருப்பராய்த்துறை




மூலவர் : பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பசும்பொன் மயிலாம்பிகை
தல விருட்சம் : பராய் மரம்
தீர்த்தம் : அகண்ட காவேரி
ஆகமம்/பூஜை : சிவாமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருப்பராய்த்துறை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

நீறு சேர்வதுஓர் மேனியர் நேரிழை கூறுசேர்வதோர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 3வது தலம்.


திருவிழா:

வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் முதல் துலா முழுக்கு விழா.

தல சிறப்பு:

சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி. 639 115.

போன்:

+91- 99408 43571

பொது தகவல்:


கருவறைக்கு பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி தனி மண்டபம் போன்ற அமைப்பில் கோஷ்டத்தில் காட்சி தருகிறார்.

ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்றகோலத்தில் இருக்கிறார். இவரை "பரளி விநாயகர்' என்கின்றனர்.



பிரார்த்தனை

பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகங்கள் செய்கிறார்கள்.

தலபெருமை:


பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார்.முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது.

சுவாமியும் "பராய்த்துறை நாதர்' என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது.

இந்த மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள்கூட வருவதில்லை.

இது வித்தியாசமானதாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் ஆகியோர் இத்தலம் மற்றும் சுவாமியைக் குறித்து பாடியுள்ளார்.

இத்தலத்தின் அருகேயுள்ள காவேரி "அகண்ட காவேரி' என்கின்றனர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் காவேரி, கொள்ளிடம் என இரண்டு நதிகளாக இது பிரிகிறது.

மாயூரத்தில் (மயிலாடுதுறை) ஐப்பசிமாதம் கடைசி நாளன்று "கடை முழுக்கு' எனும் துலா ஸ்நானம் நடப்பதுபோல இங்கு ஐப்பசி மாதம் முதல் தேதியில் காவேரிக் கரையில் "முதல் முழுக்கு' எனும் துலாஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார்.

இந்நாளில் காவேரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார்.

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். கோயில் ராஜகோபுரம் 7 நிலை உடையது.



தல வரலாறு:


முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது. இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று ஆணவமும், அவர்களது மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர்.

சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.

மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர்.

சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன்.

சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். உண்மை உணர்ந்த மகரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.



சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்-திருச்சி



மூலவர் : ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : நித்யகல்யாணி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாலத்துறை
ஊர் : திருப்பாற்றுறை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வெளவினார் பைந்தன் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 59வது தலம்.


திருவிழா:

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.

தல சிறப்பு:

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. வீணை தெட்சிணாமூர்த்தி: கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தெட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்.

திறக்கும் நேரம்:


காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை- 620 005. பனையபுரம், திருச்சி மாவட்டம்.

போன்:

+91- 431 - 246 0455.

பொது தகவல்:


சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அர்த்தமண்டபத்தில் நான்கு தூண் களுடன் ராஜசபை இருக்கிறது.

இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் சுவாமியை "மூலநாதேஸ்வரர்' என்றும், தலத்தை "கறார் கொன்றை' என்றும் பாடியுள்ளார். இங்கு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அருகிலுள்ள தலங்கள்: பஞ்சபூத தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், 108 திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கம் ஆகியவை இக்கோயில் அருகில் உள்ளன.



பிரார்த்தனை

புத்திரப்பேறு கிடைக்கவும், குழந்தைகள் நல்வாழ்க்கை வாழவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுதல்.

தலபெருமை:


அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை.

சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. தென்திசை எமதர்மராஜாவின் திசை. இவரது உக்கிரத்தைக் குறைக்க தெற்கு நோக்கிய அம்மன்களை வழி படுவதால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில், அம்பாள் நித்யகல்யாணி தெற்கு திசை நோக்கி அருளுகிறாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இப்பூஜையின் போது அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பவுர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சன்னதியில் நடக்கிறது.

புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர். மேலும், அனுக்ஞை விநாயகரும் தெற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருளுவது சிறப்பு. கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவரின் இடத்தில் சங்கரநாராயணர் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர். கோபுரம்3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.



தல வரலாறு:


இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது.

மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை.

சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.

பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்' என்றும், தலம் "பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.



சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது.

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்-



மூலவர் : உச்சி பிள்ளையார்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : காவிரி
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திரிசிராப்பள்ளி
ஊர் : திருச்சி
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு


திருவிழா:

விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல்.

தல சிறப்பு:

மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது.

திறக்கும் நேரம்:


காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி-620 001.

போன்:

+91-431- 270 4621, 270 0971, 271 0484.

பொது தகவல்:


மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக்கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு

திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இக்கோயிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.



பிரார்த்தனை

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

தலபெருமை:


திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர். என்பது அனைவரும் கண்ணால் காணக்கூடிய உண்மை. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.



தல வரலாறு:


மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.

தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்

Temples in Tamilnadu, India

Tuesday, November 17, 2009

அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்-அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்-திருச்சி


மூலவர் : ரங்கநாதர்
உற்சவர் : நம்பெருமாள்
அம்மன்/தாயார் : ரங்கநாயகி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவரங்கம்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

தொண்டரடிப்பொடியாழ்வார் மங்களாசாஸனம்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

-தொண்டரடிப்பொடியாழ்வார்


திருவிழா:

வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.

தல சிறப்பு:

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.

திறக்கும் நேரம்:


காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம்

போன்:

+91 - 431 - 243 2246.

பொது தகவல்:


ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.


பிரார்த்தனை

மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை:


ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.


கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.


வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.


திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.


டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.


தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.


மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.


பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்
மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.


காவிரி நீர் அபிஷேகம்! : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.


ஆடிப்பெருக்கு திருவிழா : ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.


கம்பருக்கு அருளிய நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.


மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.


அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.


தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.


கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.


நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்: மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.


ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயகப்படுகின்றன.


தல வரலாறு:


இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.


சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.


அருகில் உள்ள கோயில் :
அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில், அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில்